Friday, November 16, 2007

காங். சிந்திக்கட்டும்: வீரமணி



இலங்கையில் ஈழத் தமிழர்கள் அந்நாட்டு முப்படையினரால் கொல்லப்படுவதும் துன்பப்படுவதும் 20 ஆண்டுக் காலமாக நிகழ்ந்து வருகிறதே. அவர்கள் பாதுகாப்புக்காகப் போராடுபவர்கள் விடுதலைப்புலிகள் அல்லவா? இந்தப் பிரச்சினைக்கு ஓர் இணக்கமான உடன்பாடு காண முயன்ற ஒருவரது படுகொலைக்காக மனிதாபிமானத்தோடு கண்ணீர் சிந்தி அழுவது எப்படி தேசிய குற்றமாகும் என்பதைக் காங்கிரசார் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்" என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


"தமிழக முதல்-அமைச்சர், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு எழுதிய இரங்கற்பா, எங்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அவர்கள் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட துயரத்தின் காரணமாக இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். இந்தத் தீர்மானத்தினைக் கண்டு உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் இன உணர்வு கொண்ட கோடிக்கணக்கான தமிழர்கள் உண்மையாகவே ரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


ராஜீவ் காந்தி படுகொலையை எவராலும் ஏற்கவே முடியாது. இதன் விளைவுதான் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் ஈழத் தமிழர்கள் அந்நாட்டு முப்படையினரால் கொல்லப்படுவதும் துன்பப்படுவதும் 20 ஆண்டுக்காலமாக நிகழ்ந்து வருகிறதே. அவர்கள் பாதுகாப்புக்காகப் போராடுபவர்கள் விடுதலைப்புலிகள் அல்லவா? இப்பிரச்சினைக்கு ஓர் இணக்கமான உடன்பாடு காண முயன்ற ஒருவரது படுகொலைக்காக மனிதாபிமானத்தோடு கண்ணீர் சிந்தி அழுவது எப்படி தேசிய குற்றமாகும் என்பதைக் காங்கிரசார் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
கண்ணீர் அஞ்சலிக்காக ரத்தக் கண்ணீர் சிந்துகிறோம் என்று சொல்லி, இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் சக்திகளுக்குத் தோழமைக் கட்சியினர் துணை போகலாமா? கண்ணீர் வடிக்கக் கூடாது, ஆனந்தக் கண்ணீர் உகுக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் காங்கிரசார் உருவாக்கலாமா?
வெறும் வாயை மென்றவர்களுக்கு ''இந்த அவலை மெல்லுங்கள்'' என்று தருவதால் என்ன லாபம்? மத்தியில் உள்ள ஆட்சிக்கு மூலக் கல்லாக இருக்கும் தி.மு.க. ஆட்சியை அசைத்துப் பார்த்தால் யாருக்கு நட்டம் - யோசிக்க வேண்டாமா அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதநேயர்கள் மத்தியில் இது எவ்வகையான சிந்தனைகளை எழுப்பும் என்பதையும் காங்கிரசார் சிந்திக்க வேண்டும்."
இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்


சரி இந்த விவகாரத்தில் என்னதான் சொல்ல வருகிறார் வீரமணி??காங்கிரஸ் ராஜீவ் கொலையை மறந்து விடவேண்டும் என்கிறாரா,அல்லது ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்காக கண்நீர்வடிப்பது தேசத்துரோகம் இல்லை என்கிறாரா??இனிமேலாவது காங்கிரஸ் விழித்துக்கொண்டு இவரை கைது செய்யவேண்டும்.

No comments: